06/02/2018
#இன்ஜின்_ஆயில்
இது உடலில் ஓடும் ரத்தம் போன்றது. இன்ஜினில் உள்ள உலோகங்கள் ஒன்றோடு ஒன்று உரசும்போது மசகுத்தன்மை (Viscosity) இல்லையென்றால், உலோகம் விரைவாகத் தேய்வதுடன் கீறல்களும் விழுந்துவிடும்
உலோக உரசலின்போது ஏற்படும் வெப்பத்தால், இன்ஜின் உருகி தனது வடிவத்தை இழந்து, சிறிது நேரத்திலேயே செயலிழந்துவிடும். இதைத்தான் இன்ஜின் ‘சீஸ்' ஆகிவிட்டது என்கிறோம்.
இந்த இடத்தில் உரிய அளவு ஆயில் இருக்கும்போது, உலோக உராய்வு முற்றிலும் தவிர்க்கப்படுவதுடன், உராய்வால் ஏற்படும் வெப்பத்தையும் இந்த ஆயில் கடத்திவிடுகிறது. ஆகவே, இன்ஜினுக்குள் ஏற்படும் உராய்வுகள், வெப்பமடைதல் போன்றவற்றைக் குறைப்பதே இன்ஜின் ஆயிலின் முதன்மையான பணி. உடலின் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டால், எப்படி ஹார்ட் அட்டாக் வருகிறதோ, அதேபோல இன்ஜின் ஆயில், இன்ஜினுக்குள்ளே சீராகச் செல்லவில்லை என்றால், இன்ஜினுக்கு ‘அட்டாக்’ வந்து சீஸ் ஆகிவிடும். ஆனால், இன்ஜின் ஆயில் விஷயத்தில் நாம் அலட்சியமாகவே இருக்கிறோம். ‘காசை மிச்சப்படுத்துகிறேன்' என்று சரியான கிரேடு ஆயிலைப் பயன்படுத்தவில்லை என்றாலோ அல்லது போலியான/ காலாவதியான ஆயிலைப் பயன்படுத்தினாலோ, இன்ஜினுக்குள் ஆயில் ஃப்லிம் முழுமையாக உருவாகாமல், திட்டுத் திட்டாக இருக்கும். அந்த ஆயிலால் உராய்வை முழுமை யாகத் தடுக்க முடியாது. எனவே, ஆயில் விஷயத்தில் கவனமாக இல்லையென்றால், அது பெரிய அளவில் பர்ஸைப் பதம் பார்த்துவிடும்.
சமையலுக்குப் பயன்படுத்தும் எண்ணெய் களில் எப்படிப் பல ரகங்கள் இருக்கின்றனவோ, அதேபோல இன்ஜின் ஆயிலிலும் பல வகைகள் இருக்கின்றன. மேலும், அவற்றுக்கான விதிமுறைகளும், பயன்பாட்டுக்கு ஏற்ப வித்தியாசங்களும் இருக்கும். இன்ஜின் ஆயிலுக்கான விதிகளை நிர்ணயிக்கும் அமைப்புகள் பல இருக்கின்றன. அவற்றில் SAE (Society of Automotive Engineers) என்பது ஒரு சர்வதேச அமைப்பு. இதன் வழிகாட்டுதலின்படிதான், இன்ஜின் ஆயிலின் கிரேடு தீர்மானிக்கப்படுகிறது.
இன்ஜின் ஆயிலின் பணி மற்றும் மசகுத்தன்மையின் அளவு ஆகியவற்றுக்கு ஏற்ப, ஐந்து ஐந்தாக 0 முதல் 25 வரை (W) குளிர்கால கிரேடிங்கும், பத்து பத்தாக 20 முதல் 60 வரை (S) கோடை கால கிரேடிங்கும் வகை பிரிக்கப்படுகின்றன. இதில், சிங்கிள் கிரேடு மற்றும் மல்ட்டி கிரேடு என இரு வகைகள். சாதாரண பயன்பாட்டுக்கு சிங்கிள் கிரேடு ஏற்றது
நம் நாட்டின் மிதமான பருவநிலைக்கு, மல்ட்டி கிரேடு சரியான சாய்ஸ். இங்கு அதிகளவில் பயன்பாட்டில் இருக்கும் கார்களுக்கான ஆயில் கிரேடு 5W30 / 10W40 அல்லது 15W40 / 20W50 ஆகியவைதான். W-வுக்கு முன்பாக இருக்கும் நம்பர், குறைவான வெப்பநிலையைக் (குளிர்காலம்) குறிப்பிட்டால், W-வுக்குப் பின்பு இருக்கும் நம்பர், அதிகபட்ச வெப்பநிலையைக் (கோடைக்காலம்) குறிப்பிடுகிறது. எனவே, இன்ஜின் இயங்கும்போது அடர்த்தியாக இருக்கும் ஆயில், இன்ஜின் செயல்படாத போது திரவ நிலைக்கு மாறிவிடும்.
உலக அளவில் API (American Petroleum Institute) மற்றும் EACA (European Automobile Manufacturers Association ) அமைப்புகள்தான் ஆயில் கிரேடு நிர்ணயம் செய்வதில் மிகப் பழைமையானவை. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் இன்ஜின் ஆயில்களில், அமெரிக்காவின் API விதிகள்தான் பெரும்பாலும் பின்பற்றப்படுகின்றன. இது பெரும்பாலும் பெட்ரோல் இன்ஜின்களுக்கே பொருந்தும் என்றாலும், டீசல் இன்ஜின்களுக்கு என பிரத்யேகமான விதிகளையும் கொண்டுள்ளது API. ஸ்பார்க் இக்னீஷன் இன்ஜின்களுக்காக API SL அல்லது API SM கம்ப்ரஷன் இக்னீஷன் இன்ஜின்களுக்காக API CH4 அல்லது API CI4 விதிகளும் தற்போது புழக்கத்தில் இருக்கின்றன.
கார்களுக்கான ஆயில்களில், உராய்வைக் குறைக்கக்கூடிய அடீட்டிவ்கள் அதிகளவில் இருக்கின்றன. எனவே, இதை மோட்டார் சைக்கிள்களில் பயன்படுத்துவது, கிளட்ச் சிலிப் ஆவதற்கு வழிவகுக்கும். தவிர, ஆயில் விஷயத்தில் எப்போதுமே வாகனத் தயாரிப்பாளர் பரிந்துரைக்கும் கிரேடை மட்டும் பயன்படுத்த வேண்டும். கிரேடை மாற்றினால் ஆயில் ஃப்லிம், இன்ஜின் வடிவமைப்புக்கு ஏற்ப உருவாகாது. இதனால், இன்ஜினின் பெர்ஃபாமென்ஸ் பாதிக்கப்படுவதுடன், நாளடைவில் அது செயலிழப்பது உறுதி