21/10/2025
அணிந்துரை.
மௌலானா கே.எம். இல்யாஸ் ரியாஜி.
நூல்: பூமான் நபியின் பொன்மொழிக் களஞ்சியம் .
முதல் பாகம். பக்கங்கள்:776.
விலை: 700. ரூபாய்.
வெளியீடு: ரஹீமா பதிப்பகம்.
பரங்கிப்பேட்டை, கடலூர் மாவட்டம். PIN: 608502.
தொடர்புக்கு: 8870688698
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நவீன உலகின் விஞ்ஞான பாய்ச்சலுக்கு ஈடு கொடுத்து வாழ்ந்து கொண்டிருக்கும் மார்க்கம் இஸ்லாம்.
இம்மார்க்கத்தின் மூலாதார வேத நூல் இறைவேதமாம் திருக்குர்ஆன். இவ்வேதத்தின் விளக்கமாக, நடமாடும் விரிவுரையாக வாழ்ந்தவர்கள் இறைவனின் இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள். அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியன ஹதீஸ் என்றறியப்படுகின்றன.
காலத்தை வென்று வாழும் திருக்குர்ஆனுக்கு பல விரிவுரைகள் காலத்திற்கேற்ப வந்திருப்பினும்கூட அண்ணல் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்வே குர்ஆனின் ஒப்பற்ற விரிவுரையாகத் திகழ்கிறது.
கால ஓட்டத்திற்கு ஏற்ப நவீன விளக்கங்களை வெளிப்படுத்தி வருகின்ற அருள்மறையாம் திருக்குர்ஆனுக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பும் குறிப்புரையும் தந்த அறிஞர் யூசுப் அலி அவர்கள் கூறுகிறார் “குர்ஆனின் சிறந்த விரிவுரை காலம் தான்” என்று. ஒருவகையில் இது உண்மைதான் என்றிருப்பினும் கூட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கையை விட இன்னொன்று சிறந்த விளக்கமாக இருந்திட இயலாது என்பதே இஸ்லாமிய அறிவுலகம் அடித்துச் சொல்லும் உண்மை.
எனவே தான் ஹதீஸ்களுக்கு சேவையாற்றிட, அவற்றை ஊடுருவல்கள் கலப்படங்கள் திரிபுகள் ஆகியனவற்றிலிருந்து காத்திட ஒவ்வொரு காலத்திலும் அருஞ்சேவை ஆற்றி வருகின்றனர் இஸ்லாமிய பேரறிஞர்கள். இச்சேவையில் தன்னையே உருக்கி ஊற்றியவர்கள் ஏராளம்.
தஃப்சீர் எனும் குர்ஆன் விரிவுரை, ஹதீஸ் எனும் நபிவழித்துறை, ஃபிக்ஹ் எனும் சட்டவியல், தாரீஹ் எனும் வரலாறு, (தனிநபர் வரலாறு- சமூகங்களின் வரலாறு- நகரங்களின் வரலாறு- நாகரிகங்களின் வரலாறு) என பல்வேறு கலைகளிலும் துறைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் அறிஞர்கள் அனைவரும் அதன் மூலமாக பொன்னினும் அரிய மார்க்கமான இஸ்லாத்துக்கும் அதன் மூலாதாரமான திருக்குர்ஆனுக்கும் அதன் விரிவுரையான நபிவழிக்கும் சேவையாற்றுவதையே இலக்காகக் கொண்டு இயங்கி வந்திருக்கின்றனர்.
ஆம். ஒரு விரிவுரையில் களங்கமும் கலப்படமும் சேரும்போது தொடக்கத்திலேயே அது துடைத்தெறியப்படாவிடில் காலப்போக்கில் அது மூலநூலின் மீதே ஐயங்கள் ஏற்படக் காரணமாகிவிடும்.
திருக்குர்ஆன் ஒரு பல்கலை வேதமாக இருப்பதால், அதைக் காத்திடக் கடமைப்பட்ட முஸ்லிம்கள் எல்லாக் கலைகளையும் களங்கங்களிலிருந்து காக்கும் கடமையை சுமக்க வேண்டியவர்களாகி விட்டனர்.
அதன் ஒப்பற்ற விரிவுரையான ஹதீஸ்களை கூடுதல் கவனத்தோடு காப்பாற்றுவது இச்சமுதாயத்தின் இயல்பான கடமைகளில் ஒன்றாகி விட்டது. இந்தக் கடமையை ஒவ்வொரு காலத்திலும் அறிஞர் செவ்வெனே செய்துள்ளனர். சிலர் இதற்காக தம் வாழ்நாளையே அர்ப்பணித்துள்ளனர்.
இந்நூலாசிரியரும் இத்துறையில் தனது வகிபாகத்தை சரியாக நிறைவேற்றியுள்ளார். அவரின் நோக்கமும் அதுவே. அதை இந்நூலின் முன்னுரையில் முதல் பாராவிலேயே தெள்ளத்தெளிவாக சொல்லிவிடுகின்றார். “ஸஹீஹ் மற்றும் ஹசன் தரத்திலான நபி மொழிகளையெல்லாம் மீளக் கூறாமல் ஒரே தொகுப்பாக திரட்டி தர வேண்டும் என்பதே நோக்கம்” என்று கூறுகிறார்.
இந்நூலை வாசிக்கும் போது அவர் அந்த நோக்கத்தை மிகத் துல்லியமாக சரியாக அடைந்து விட்டார் என்றே தோன்றுகிறது. இதற்காக அவர் பெரும் சிரத்தையும் மெனக்கிடலும் செய்திருக்கிறார்.
இந்நூலுக்கு அவர் சூட்டியிருக்கும் துணைப் பெயர் “ஜாமிவுல் மஸானீதி வஸ்ஸுனனில் ஹாதீ லி அக்வமி சுனன்” என்பது. இதன் பொருள்: “நேர்த்திமிக்க நபிவழிகளுக்கு வழிகாட்டும் முஸ்னது மற்றும் சுனன் நூல்களின் தொகுப்பு”.
சுன்னா என்ற சொல்லுக்கு நேர்த்தியான வழி என்பதே பொருள். அப்படி இருக்க மிக நேர்த்தியான சுன்னாவின் தொகுப்பு என்று இந்நூலுக்கு அவர் துணைப் பெயர் சூட்டி இருப்பதன் காரணம் என்னவெனில், “சுன்னா” என்ற நேர்த்திமிக்க பாதையில், பலவீனமான இட்டுக்கட்டப்பட்ட உண்மைக்கு புறம்பான சில தகவல்களும் கலந்திருப்பதை களைந்து சுன்னாவை நேர்த்தி மிக்க அதன் இயல்புக்கு இந்நூல் கொண்டு செல்வதால் இந்த துணைப் பெயர் பொருத்தமானது தான்.
சுன்னா என்ற அரபுச் சொல்லுக்கு “மகாயீசுல் லுஙா” என்ற நூலில் அறிஞர் இப்னுல் பாரிஸ் அவர்கள் தரும் விளக்கம் என்னவெனில்,
“சீன், நூன் ஆகிய ஈரெழுத்துகளால் உருவாகும் சொல் எளிதாய் செல்வதை குறிக்கும். நீரோட்டம் எளிதாய் அமைந்திருப்பதற்கு இச்சொல்லை அரபுகள் பயன்படுத்துவர். (“சன்னல் மாவு” = நீர் எளிதாக ஓடியது என்பது போல). தெள்ளத் தெளிவான, நேரான, தொலைவிலும் மறைவின்றித் தெரிகின்ற, நடக்க எளிதான பாதையே சுன்னா எனப்படும். கரடு முரடான, மேடு பள்ளமான, குப்பை கூளங்கள் கிடக்கின்ற, அசுத்தமான பாதையை சுன்னா என்று சொல்ல இயலாது, சொல்லக்கூடாது. எந்த பாதையில் போனால் இலக்கை அடைய இயலாதோ அதுவும் சுன்னா அல்ல. எந்தப் பாதை நடக்கச் சிரமமானதோ அதுவும் சுன்னா அல்ல.
இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் நடந்து காட்டிய சுன்னா என்ற பாதை நடக்க எளிதானது, கரடுமுரடானதல்ல. தூய்மையானது, குப்பை கூளங்களற்றது. நேரானது, கரடு முரடற்றது.
ஹிஜ்ரி முதலாம் நூற்றாண்டின் மத்திய காலத்திலேயே அந்தப் பாதையில் விரும்பத் தகாத சேதங்களை ஏற்படுத்த சிலர் முயன்றனர். அதன் செம்மையை சீர்குலைக்க நினைத்தனர். அந்தப் பாதையில் மனிதக் கருத்து எனும் கழிவுகளை அள்ளிப் போட முயன்றனர். இவ்வாறு சுன்னாவை களங்கப்படுத்த முனைவோரின் புகலிடம் நரகமே என்று எச்சரிக்கின்றன நபிமொழிகள்.
அந்த நபிமொழிகளால் சிந்தனை செல்வாக்கைப் பெற்ற பல செம்மாந்த சீலர்கள், இந்த அருவருப்பை அந்தப் பாதையிலிருந்து அகற்றி சுத்தப்படுத்திட வந்தனர். சுன்னாவை எஃகு கரைகட்டி காத்தார்கள்.
இந்நூலும் அந்தப் பெரும் முயற்சியின் ஓர் அங்கமே. தமிழ் கூறும் நல்லுலகுக்கு இந்த நூலை மொழிபெயர்த்து தந்திருக்கும் வெளியீட்டாளர்களின் நோக்கம் இறைப் பொருத்தத்தை பெறத்தக்கது. பாராட்டுக்குரியது. இது போன்ற நூல்களின் வருகை அறிஞர்களுக்கும் சமுதாயத்துக்கும் இடையில் ஓர் இணைப்பு பாலமாக இருக்க வேண்டுமே அன்றி தடுப்புச் சுவராக அல்ல.
இதை சமுதாயம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அல்லாஹ் போதுமானவன்.